"1984, சிங்கள இராணுவத்திற்கும், தமிழ்ப் போராளிகளுக்கும், இஸ்ரேலியர்கள் ஒரே நேரத்தில் இராணுவப் பயிற்சி வழங்கினார்கள். எதிரிகளான இரண்டு குழுக்களும் இஸ்ரேலில் ஒரே முகாமில் தங்க வைக்கப் பட்டு பயிற்சியளிக்கப்பட்டது. இலங்கையில் போர் தீவிரமடைந்தால், ஆயுதங்கள் விற்று பணம் சம்பாதிப்பதே இஸ்ரேலிய அரசின் நோக்கம்."(By Way of Deception: The Making of a Mossad officer)
"இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். காலத்தில் இருந்தே இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு வந்துள்ளது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி தொடக்கம், இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரையில் யுத்தத்தை நடத்துவதற்கு மொசாட் வழிகாட்டி வந்துள்ளது. இலங்கையில் ஈழப்போரை முடிக்க விடாது தொடர்வதற்காக, மொசாட் இந்தியாவிலும் செல்வாக்கு மிக்க பெரும்புள்ளிகளை வளைத்துப் போட்டது. RAW விற்குள்ளும் மொசாட் ஆட்கள் இருந்தனர். இந்தியப் படைகளை அனுப்பி போரை முடிவுக்கு கொண்டு வந்ததாலும், இஸ்ரேலிய ஆயுதங்கள் பிடிபட்டதாலும், ராஜீவ் காந்தியை மொசாட் தீர்த்துக் கட்டியிருக்கலாம். பழியை புலிகள் மீது சுமத்துவதற்கு சுப்பிரமணிய சுவாமி போன்ற மொசாட் கையாட்கள் உதவினார்கள்."
இதுவரை வெளிவராத பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை முன்னாள் மொசாட் அதிகாரி Victor Ostrovsky தனது நூலில் வெளிக் கொணர்ந்துள்ளார். By Way Of Deception என்ற அந்த நூலில், ஈழப்போரில் மொசாட்டின் பங்களிப்பு பற்றி வந்த குறிப்புகளை சுருக்கமாக தொகுத்துத் தருகிறேன்.
இலங்கையில் மொசாட் இரண்டு தரப்பினருக்கும் பயிற்சியளித்து ஆயுதங்களை கொடுத்து வந்தது. கம்போடியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலும் உள்ள இஸ்ரேலியரின் நிறுவனங்கள் ஆயுதங்களை விநியோகம் செய்தன. இலங்கையை அதிக இலாபம் தரும் ஆயுத சந்தையாக மாற்றுவதே மொசாட்டின் நோக்கம்.
1983 ல் தமிழர்கள், சிங்களவர்களிடம் இருந்து சுதந்திரம் கோரி போராடத் தொடங்கினார்கள். சிங்கள ஜனாதிபதி ஜெயவர்தனே 50 மொசாட் அதிகாரிகளை பயிற்சிக்காக அழைத்திருந்தார். அவர்கள் மாதுறு ஓயா என்னும் இடத்தில் சிறிலங்கா படையினருக்கு பயிற்சி அளித்தனர். அது ஒன்றும் இரகசியம் அல்ல. அன்று எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்த செய்தி தான்.
1984 லிலும் 1985 லிலும் தமிழ்ப் போராளிகள் இஸ்ரேலுக்கு பயிற்சிக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த நூலின் ஆசிரியரான விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கி அவர்களை பயிற்சி முகாம்களுக்கு கொண்டு சென்று, பயிற்சி முடிந்தவுடன் அனுப்பி விடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். இந்தியாவில் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருந்த மொசாட் ஆள் ஒருவர், பயிற்சிக்கு அனுப்பி வைக்கும் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார். இலங்கையில் யுத்தம் வெடித்தவுடனே RAW அதிகாரிகளை மொசாட் அணுகியது. 1984 ஜூலை மாதம் RAW வில் இருந்த சில அதிகாரிகள் தமிழர்களை கொமாண்டோ பயிற்சிக்காக அனுப்பும் பொறுப்பை ஏற்றனர். அவ்வாறு பயிற்சிக்கு அனுப்பப்பட்ட தமிழ்ப் போராளிகள் TELO அமைப்பை சேர்ந்தவர்கள். இந்தியாவுடன் நெருங்கிய உறவை பேணி வந்ததாலேயே அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்த ஒழுங்குகளை மேற்கொண்ட RAW அதிகாரிகளுக்கு மொசாட் BCCI வங்கி இலக்கம் ஒன்றின் ஊடாக பணம் அனுப்பியது.
அதே நேரம் தமிழர்களின் எதிரிகளான சிங்கள இராணுவத்திற்கும் இஸ்ரேலில் பயிற்சி வழங்கப்பட்டது. இஸ்ரேலியர்கள் இந்த தகவலை தமிழர்களுக்கோ, இந்திய அரசுக்கோ தெரிவிக்காது இரகசியமாக வைத்திருந்தனர். பயிற்சிக்கு வந்த இரண்டு குழுக்களும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத படி பிரித்து வைக்கப்பட்டனர். டெல் அவிவ் நகரத்திற்கு அருகில் Kfar Sirkin எனும் தளத்திலேயே அந்த இரண்டு வார கொமாண்டோ பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இரண்டு வார பயிற்சிக்கு பின்னர், ஹைபா நகருக்கு அருகில் உள்ள Atlit என்ற மிக இரகசியமான கடற்படை முகாமுக்கு தமிழர்களை கொண்டு சென்றனர். அங்கு வைத்து மேலதிக பயிற்சிகளை வழங்கி விட்டு திருப்பி அனுப்பினார்கள். அவர்களை அனுப்பி விட்டு அந்த இடத்திற்கு சிங்களப் படையினரை கொண்டு வந்தார்கள். தமிழ் போராளிகளிகளுக்கு சொல்லிக் கொடுத்த போர்த்தந்திரங்களை எவ்வாறு சமாளிப்பது என்று கற்றுக் கொடுத்தனர்.
இஸ்ரேலியர்கள் பயிற்சிக்காக சிங்களப் படையினரிடம் பெருமளவு பணத்தை அறவிட்டார்கள். ஒவ்வொரு சிங்களவரும் ஒரு நாள் பயிற்சிக்கு 300 டாலர் கட்ட வேண்டும். சிறிலங்கா இராணுவக் குழு ஒன்றுக்கான மூன்று மாத பயிற்சிக்கு ஒன்றரை மில்லியன் டாலர்கள் அறவிட்டார்கள். ஹெலிகாப்டர் பயிற்சிக்கு ஒரு மணித்தியாலம் 5000 டாலர்கள். கனரக ஆயுத பயிற்சிக்கு பாவிக்கப்பட்ட ஷெல்களுக்கும் இஸ்ரேலியர்கள் பணம் வசூலித்தார்கள். உதாரணத்திற்கு பசூக்கா (ரொக்கட் லோஞ்சர் போன்ற சுடுகருவி) பயிற்சிக்கு பாவிக்கப்பட்ட ஷெல் ஒன்று 220 டாலர். கனரக மோர்ட்டார் பயிற்சிக்கு பாவித்த ஷெல் ஒன்று 1000 டாலர்.
தமிழ் போராளிகள் மத்தியில் நிதிப்பற்றாக்குறை காணப்பட்டதால், இஸ்ரேலியர்கள் அவர்களிடம் பணம் கேட்கவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக தமிழர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மிகப் பெரிய போருக்கு முதலீடு செய்வதாக கருதிக் கொண்டனர். யுத்தம் தீவிரமடைந்தால் ஆயுதங்களின் தேவை அதிகரிக்கும். அப்போது இலங்கை இராணுவத்திற்கு பல கோடி பெறுமதியான ஆயுதங்களை விற்று பெரும் இலாபம் சம்பாதிக்கலாம் என கணக்குப் போட்டார்கள்.
1985 ல், இலங்கையில் உளவு நடவடிக்கைகளுக்கான இணைப்பு அதிகாரியாக Rafi Eytan அனுப்பி வைக்கப்பட்டார். இஸ்ரேலிய வேதியல் நிறுவனம் ஒன்றின் உத்தியோகத்தர் என்ற போர்வையில் அவர் இலங்கையில் உளவு பார்த்தார். 1987 ல், அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனவுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார். தமிழ்ப் பிரதேசங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்து, 3000 இந்தியப் படைகளை அனுப்பினார். யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட அல்லது கண்டெடுத்த ஆயுதங்களில் பல இஸ்ரேலிய தயாரிப்புகள். அதைத் தொடர்ந்து இலங்கையில் இருந்த இஸ்ரேலியர்களை வெளியேற்றுமாறு ராஜீவ் காந்தி வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கையில் சமாதானம் ஏற்பட்டால் தமது ஆயுத விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும் என்று மொசாட் அஞ்சியது. மொசாட்டிடம் இருந்து பணம் வருவது நின்று விடும் என்று சில RAW அதிகாரிகளும் பயந்தனர். அப்போதே ராஜீவ் காந்திக்கு எதிரான சதி ஆரம்பமாகி விட்டது. இஸ்ரேலின் ஆயுத விநியோகம் தடுக்கப்பட்டதால் 21 மே 1991 ல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். படுகொலைக்கு ஐந்து வாரங்களுக்கு முன்னதாக, ராஜீவ் மீது இலக்கு வைக்கப் பட்டிருப்பதாக யாசீர் அரபாத் எச்சரிக்கை விடுத்திருந்தார். ராஜீவ் காந்தியை கொன்ற RDX வெடிகுண்டு இஸ்ரேலிய தயாரிப்பு என நம்பப்படுகின்றது. ராஜீவ் கொலை விசாரணை இரகசியமாக நடத்தப்பட்டது. நீதிமன்ற ஆவணங்கள் பகிரங்கப் படுத்தப் படவில்லை. "தற்கொலைக் குண்டுதாரி" என கருதப்படும் நபருக்கு என்ன நடந்தது என்பது ஒருவருக்கும் தெரியாது. சுப்பிரமணிய சுவாமி என்ற பிரமுகர் இஸ்ரேலின் சம்பளப் பட்டியலில் இருந்தார். அவர் விடுதலைப் புலிகளே ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததாக தொடர்ந்து எழுதி வந்தார். இஸ்ரேல் விடுதலைப் புலிகளுக்கு அல்ல, டெலோ அமைப்பை சேர்ந்தவர்களுக்கே இராணுவப் பயிற்சி வழங்கி வந்தமை மீண்டும் குறிப்பிடத் தக்கது. ராஜீவை தற்கொலைக் குண்டுதாரி கொல்லவில்லை. அவருக்கு வைக்கப்பட்ட குண்டு, TELO -RAW - Mossad கூட்டு நடவடிக்கையாக இருக்கலாம்.
அதன் பிறகு இலங்கையில் யுத்தமும், கொலைகளும் தொடர்ந்தன. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இஸ்ரேல் ஆயுதம் விற்று மில்லியன் டாலர்களை சம்பாதித்து விட்டது. 1988 ல், தென்னிலங்கையில் பிரேமதாசாவுக்கும், லலித் அத்துலத்முதலிக்கும் இடையில் ஜனாதிபதி பதவிக்கு போட்டி ஏற்பட்டது. லலித் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த காலத்தில், மொசாட்டின் சம்பளப் பட்டியலில் இருந்தவர் தான். ஆனால் தற்போது தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காக இஸ்ரேலுக்கு எதிராக திரும்பினார். பிரேமதாச காலத்தில் தான், மொசாட் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சியளித்தது. இலங்கையில் மொசாட் பயிற்சி முகாம்களை அமைக்க உதவியதாக, பிரேமதாசாவுக்கு எதிராக லலித் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதனால் அவரும் கொலை செய்யப்பட்டார்.
சந்திரசுவாமி என்ற பிரமுகர் RAW வுடனும், மொசாட்டுடனும் தொடர்பு வைத்திருந்ததை இந்திய நீதிபதி ஜெயின் கண்டறிந்தார். BCCI (Bank of Credit and Commerce International ) வங்கி மூலமே, சந்திரசுவாமிக்கும் மொசாட்டுக்குமான தொடர்பு ஏற்பட்டது. Agha Hasan Abedi என்ற பாகிஸ்தானிய பிரஜை BCCI வங்கியை நிறுவினார். அது இன்று 78 நாடுகளில், 400 கிளைகளுடன் இயங்கி வருகின்றது. அதன் சொத்து மதிப்பு 25 பில்லியன் டாலர்கள். லண்டனில் தலைமையகத்தை கொண்டிருந்தாலும், இலகுவாக கறுப்புப் பணத்தை மாற்றக் கூடிய லக்சம்பெர்க்கிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலியர்களும் இரகசிய பணப் பரிமாற்றங்களை BCCI ஊடாகவே செலுத்துகின்றனர். லண்டனில் இருந்த BCCI கிளை (Sloane Street branch ) ஒன்றின் மூலம் பாலஸ்தீன தீவிரவாதி அபுநிதால் பணம் பெற்று வந்ததாக, பிரிட்டனின் MI5 க்கு தெரிய வந்தது. மொசாட் மட்டுமல்ல, பாகிஸ்தானின் ISI, இங்கிலாந்தின் MI6, அமெரிக்காவின் CIA, எல்லாமே BCCI வங்கியை பயன்படுத்தினார்கள்.