இதயத்திற்கு எதிரியே எண்ணெய்தான்
இதயத்திற்கு எதிரி என்றால் அது எண்ணெய்தான். எண்ணெயைக் குறைத்துக் கொண்டால், கூடுமான அளவு தவிர்த்துவிட்டால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆனால் எண்ணையே இல்லாமல் எப்படி சமைப்பது என்று இல்லத்தரசிகள் நம்மை மறுகேள்விக் கேட்பார்கள். அதற்கு, ஒரு சொட்டு எண்ணை கூட பயன்படுத்தாமல் சமையல் செய்வது எப்படி என்று மருத்துவர் பிமல் சாஜர் நேற்று சென்னையில் செய்து காட்டினார்.
உலகம் முழுவதும் இதய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல. தற்போது குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறி உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை.
குளிர்பானங்கள், பாஸ்ட் புட் முதலியவற்றைதான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இத்தகைய காரணங்களால் சிறிய வயதிலேயே எடை அதிகரிக்கிறது. சர்க்கரைவியாதி, உயர் ரத்த அழுத்த இதயநோய் வருகிறது.
இதய நோய்க்கு எண்ணைதான் மூல காரணமாக விளங்குகிறது. அசைவ உணவுகளை எண்ணெய் ஊற்றி அதிகநேரம் வறுத்து சாப்பிடுவதால் அதிக எண்ணை உடலில் சேர்கிறது.
எனவே எண்ணை இல்லாமல் சமையல் செய்து சாப்பிட்டால் இதய நோய் வராது என்றும் இதயநோய் இருப்பவர் மட்டுமல்ல, ரத்த நாளத்தில் 10 அடைப்பு இருப்பவர்கள் கூட, ஏன், பைபாஸ் சர்ஜரிக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் கூட எண்ணை பயன்படுத்தாத சமையலை சாப்பிட்டால் ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது என்றும் அறுவை சிகிச்சையே தேவை இல்லை என்றும் இதய சிகிச்சை நோய் நிபுணரும் சாஓல் என்ற விஞ்ஞானம் மற்றும் வாழும் கலை அமைப்பை சேர்ந்த மருத்துவர் பிமல் சாஜர் கூறுகிறார்.
அவர் எண்ணை இல்லாத சமையலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் செய்து காண்பித்தார்.
நான்ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தி அதில் ஒரு சொட்டு எண்ணை பயன்படுத்தாமல் பக்கோடா தயாரித்து காட்டினார். அதை பலரும் சுவைத்து சாப்பிட்டனர். அதேபோல கோதுமை மாவில் பால் எடுத்து அந்த பாலைக்கொண்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் இன்றி எந்தவித டால்டாவும் பயன்படுத்தாமல் சுவையான அல்வா தயாரித்துக் காட்டினார்.
அதுபோல சாம்பார் சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு கூட்டு, பட்டர் பீன்ஸ் கலந்த கீரைக்கூட்டு உள்பட பல சமையல்களை செய்து காண்பித்தார்.
அந்த சமையலை அங்கு டாக்டரிடம் பயிற்சிக்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு ருசித்தனர். அவர்கள் கூறுகையில், எண்ணை பயன்படுத்தி சமைத்தது போன்றே, நல்லசுவையாக உள்ளது என்று தெரிவித்தனர்.
எண்ணை இல்லாத சமையல் குறித்து டாக்டர் பிமல் சாஜர் கூறுகையில், சாஓல் என்ற விஞ்ஞான மற்றும் வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். இதன் நோக்கமே இதய நோய் இல்லாமல் எல்லோரும் வாழ வேண்டும். இதய நோய் வந்தவர்களும் அதில் இருந்து விடுபட்டு சுகமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இதய நோய்க்கு மூலக்காரணம் எண்ணைதான்.
எண்ணை இல்லாமல் எல்லா சமையலும் செய்ய முடியும். அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். தென் இந்திய சமையலில் மட்டும் பொரியல், கூட்டு, குழம்பு உள்பட 155 வகைகளை செய்து காட்டி உள்ளோம். அதற்கான புத்தகமாக, `எண்ணை இல்லா தென் இந்திய சமையல்' என்று ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளோம்.
நான் என்னுடைய மருத்துவ பணியில் இந்தியாவில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதய நோயாளிகளை இருதய அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி உள்ளேன். அதாவது ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் எங்கள் இருதய திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்துள்ளனர். திட்டத்தின்படி 3 நாள் பயிற்சி அளிக்கப்படும்.
அதாவது ஒவ்வொரு சாப்பாட்டிலும் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது. எவ்வளவு கலோரி உள்ளது. அவற்றால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன, வரும் நோயாளிகளின் வேலை என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறியப்படும்.
பின்னர் அவர்களுக்கு யோகா கற்பிக்கப்படும். எண்ணை இல்லாத சமையலை நேரில் செய்து காண்பிக்கப்படும். தினமும் 35 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய ஆலோசனை வழங்கப்படும். மனதில் டென்சன் இல்லாமல் இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோன்று வாழும் கலை பற்றிய முழுப் பயிற்சியும் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பழ வகைகளை சாப்பிடலாம். அதில் எந்தவித கெடுதலும் இல்லை. பப்பாளி, கொய்யா, திராட்சை, வெள்ளரிக்காய், வெண்ணை எடுத்த மோர் ஆகியவற்றை நன்றாக சாப்பிடலாம்.
இந்த பயிற்சி முகாமில் அவர்களுக்கு நாங்கள் கற்றுக் கொடுத்தபடி அவர்கள் தங்களது வாழ்க்கை முறையில் கடைப்பிடிக்க வேண்டும். அறுவை சிகிச்சையை விட இவற்றை கடைபிடிப்பது எளிதானது என்பதால் பயிற்சிக்கு வருகின்ற பெரும்பாலானவர்கள் இதனைக் கடைபிடித்து இருதய நோய் இன்றி நலமுடன் வாழ்கிறார்கள்.
ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளவர்கள் அடைப்பு நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். அதற்கு முக்கிய காரணம் எண்ணை இல்லாமல் சாப்பிடுவதே ஆகும் என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment