Wednesday, 3 November 2010

வருகிறார்கள் ... வேற்று கிரகவாசிகள்

பூமியில் வாழும் ஜீவராசிகளைத் தவிர, பிற கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்ற கேள்வி காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வுகள், வேற்று கிரக உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன. எனினும் இன்று வரை உறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆதாரங்கள் எப்போது கிடைக்கும் என்பதும் நமக்குத் தெரியாது. எனினும், வேற்றுகிரக ஜீவராசிகள் உருவாவதற்கும், வாழ்வதற்கும் உள்ள சூழல் குறித்து அறிவுஜீவியான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் தன்னுடைய இயற்பியல் மற்றும் பிரபஞ்ச அறிவைப் பயன்படுத்தி வேற்று கிரக உயிரினங்கள் எப்படியிருக்கும் என்று தர்க்க ரீதியில் விளக்குகிறார். நமது அறிவை தட்டி எழுப்பும் அவரது கருத்துக்களின் சாராம்சம் இதோ:

வேற்று கிரக உயிரினங்கள் நட்சத்திர மண்டலங்களுக்குள் இருக்கலாம். அல்லது பிரபஞ்சத்தின் மேகக்கூட்டங்கள் போன்ற பகுதிகளில் நுண்ணுயிர்களாக இருக்கலாம். கண் இமைக்கும் நேரத்தில் வாழ்ந்து மறைந்துவிடக் கூடிய நுண்ணுயிரிகள் கூட இருக்கலாம். ஆகவே பிரபஞ்சத்தில் உயிரினங்களில் எதைத் தேடுவது எங்கு தேடுவது என்ற கேள்விகள் முக்கியமானவை.பிரபஞ்சத்தில் இயற்பியல் விதிகள் எல்லாம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், உயிர் வாழ்க்கைக்கான விதிகளும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். அப்படியானால் நாம் வாழும் இந்த தாய் பூமியில் உயிரினம் தோன்றியது பற்றி நாம் அறிந்து கொண்டால், இந்த தேடலைத் தொடங்க முடியும்.45 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு எது காரணமாக அமைந்தது என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. ஆனால் இங்கு அபரிமிதமாக இருந்த அமினோ அமில குட்டைகளில், அணு மூலக்கூறுகள் ஒரு கச்சிதமான ஒருங்கிணைவு நிகழும் வரை ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்தன. பிறவி எனும் ஓர் உயிர் தோன்றும் வரை இந்த மோதல்கள் நடந்தன. எந்த தூண்டலும் இன்றி, உயிர் தோன்றியிருக்க முடியுமா என்பது தெரியவில்லை.பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்பாக, வேற்று கிரகங்களில் தோன்றிய உயிர்கள் இங்கு பரவியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. பூமியில் விழுந்த கற்களின் இடைப்பகுதியில் அந்த உயிரினங்கள் இருந்து, இங்கு வந்து சேர்ந்திருக்கலாம். அந்த உயிரினங்கள் விண்வெளியின் வெப்பத்தையும், வெற்றிடத்தையும் தாங்கும் திறனைப் பெற்றிருந்திருக்கும்.உயிர் தோன்றிவிட்டால், அதற்கடுத்து உள்ள அம்சம், உயிர் வாழ்தல். உயிர் வாழ்தலுக்கு ஓர் ஆதாரம் தேவைப் படுகிறது. அதை நாம் உணவு என்கிறோம். ஒருமுறை ஊட்டம் பெற்ற உயிர், அடுத்து சூழ்நிலைக்கு ஏற்ப வாழ தன்னை மாற்றிக் கொள்கிறது. இனப் பெருக்கம் செய்கிறது. பரிணாம வளர்ச்சிக்கும் வித்திடுகிறது. பரிணாம வளர்ச்சி என்பது பூமிக்கு மட்டும் பொதுவானது அல்ல. அது வேற்றுகிரகவாசிகளுக்கும் பொதுவானது. வேற்று கிரகங்களில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டால் அங்கு, ஜீவராசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு இந்த பிரபஞ்சத்தில் அபரிமிதமாக உள்ள தண்ணீர் நல்ல பதில் அளிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. தண்ணீர் இருந்தாலும் அந்த கோளின் இருப்பிடம், அதிக வெப்பம் மற்றும் குளிர் இல்லாத இடங்களாக இருக்க வேண்டும். அப்படியானால், சூரியனைச் சுற்றி உள்ள இரு கோள்களான பூமி மற்றும் செவ்வாய் அந்த வாய்ப்பைப் பெறுகின்றன. 1970களிலிருந்து மனிதர்கள் செவ்வாயை ஆராய்ந்து கொண்டிருந்தாலும், அங்கு உயிர் இருப்பதை உறுதி செய்யவில்லை. நாசா தண்ணீருடன் இணைந்த ஓர் வெண்ணிற உப்பை கண்டறிந்தது. உயிர் வாழ்வதற்கான ஈரப்பதம் அங்கு இருக்கிறது. ஆகவே அந்த முயற்சியை விஞ்ஞானிகள் கைவிடமாட்டார்கள்.

இதைத் தவிர நமது சூரிய குடும்பத்தில், உயிர் இருப்பதாகக் கருதக்கூடிய இன்னொரு இடம் வியாழன் கோளை சுற்றி வரும் துணைக்கோளான ஐரோப்பா. இது 3,200 கி.மீ., விட்டமும் மைனஸ் 260 டிகிரி குளிர்நிலையும் கொண்ட சிறிய துணைக் கோள். இக்கோள் சுற்றிவரும் பாதை வட்ட வடிவமாக இருப்பதால், வியாழனின் ஈர்ப்பு விசையால் துணைக்கோளின் இயக்கத்தின் போது, உள்புறமாக வெப்பம் உருவாகியிருக்கலாம். அதனால், பனிக் கட்டிகளுக்கு கீழே கடல் இருக்கலாம். அங்கு வாழத்தகுந்த உயிரினங்கள் உருவாகியிருக்கலாம். நமது ஆழ்கடல் உயிரினங்களைப் போல் அங்கு உயிரினங்கள் இருக்கலாம். அங்கு மேம்பட்ட உயிர்கள் வாழ்ந்தாலும், அவை அவற்றுக்கு மேலே 25 கி.மீ., பனி உறைந்த நிலையில் இருப்பதால், அவற்றுக்கு பிரபஞ்சம் இருப்பது தெரியாது. அவர்கள் நம்முடன் தொடர்பும் கொள்ள மாட்டார்கள்.நமது சூரிய மண்டலத்தைத் தவிர வேறு இடங்களில் உயிர்கள் இருக்கிறதா என்பதையும் நாம் தேட வேண்டும். 1995ம் ஆண்டில் முதலில் ஒரு வேற்று கிரகம் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட கோள்கள் கண்டறியப்பட்டுவிட்டன. அந்த கோள்களில் திரவ வடிவில் தண்ணீர் இருக்கலாம். பரிணாமத்தின் சக்தியால் அங்கு வேற்றுகிரக ஜீவராசிகள் நமக்கு அறியப்பட்டவைப் போலக் கூட இருக்கலாம்.தரையில் வாழக்கூடியவையாக இருந்தால் அவற்றுக்கு கால்கள் இருக்க வேண்டும். கண்கள் அமைந்திருந்தால் அது பூமியில் உள்ள ஜீவராசிகளை ஒத்த அமைப்பை உடையதாக இருக்கும். பரிணாமத்தின் உச்சகட்ட எல்லைகளை நம்மால் உணரமுடியாது.

வேற்று கிரக வாசிகள் நம்மவர்களை கடத்திச் செல்வதாக நிறையக் கதைகள் வந்திருக்கின்றன. ஆனால், அவர்கள் ஏன் நம்மைக் கடத்த வேண்டும். நாம் 40 ஆண்டுகளாக விண்வெளியை கவனித்துக் கொண்டிருக்கிறோம். ஒரே ஒரு மர்மமான வாய்ப்பைத் தவிர, வேறு எந்த அறிகுறியையும் வேற்று கிரகவாசிகளிடம் இருந்து நாம் பெறவில்லை. 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி ஒஹயோவில் இருக்கும் ஒரு ரேடியோ டெலஸ்கோப் ஒரு சமிக்ஞையை கிரகித்தது. ஒரு கம்ப்யூட்டர் 6 எழுத்துக்களும் எண்களும் கொண்டதாக அதை பதிவு செய்தது. ஆங்கிலத்தில் இது "வாவ்' என்று அறியப்பட்டது. இது வேற்று கிரகவாசிகள் இந்த சமிக்ஞை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இந்த "வாவ்' சமிக்ஞை 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திர மண்டலத்திலிருந்து வந்ததாக தோன்றியது.அதற்கு நாம் ஒரு பதில் அனுப்பினால் அது அவர்களை சென்றடைய 200 ஆண்டுகள் ஆகும். அந்த காலத்திற்குள் அவர்கள் தகவல் அனுப்பியதே மறந்து அதற்கு பதில் வருகிறதா என்று கவனிப்பதையே விட்டுவிடுவார்கள். அதை விட மோசமாக அவர்கள் தங்களையே அழித்துக் கொண்டும் விடலாம். மனித இனம் மிக விரைவாக அணுகுண்டின் சக்தியை கண்டறிந்து கொண்டது. அதே விஷயம் அந்த வேற்று கிரகவாசிகளின் விஷயத்திலும் நடந்தால் அவர்களும் நீண்ட நாள் வாழமுடியாது. வேற்றுகிரகவாசிகளை தேட, நாம் அவர்களது செய்திகளை கவனிக்கலாம். அல்லது நாம் பேசத்தயாராக இருப்பதாக நம்முடைய ஆர்வத்தை ஒலிபரப்பு செய்யலாம்.

ஆனால் நாம் என்ன சொல்ல போகிறோம் என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் முதுமை அடைவதை வெற்றிகொண்டு சாகா நிலைமையை கூட அடைந்திருக்கலாம். அதற்கும் மேலாக இந்த மேம்பட்ட நிலையை அவர்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்திருக்கலாம். இது நடக்காது என்று தோன்றினாலும், நீங்கள் இதை தர்க்க ரீதியாக சிந்தித்தால், ஒரு குகைவாசிக்கு அல்லது ஆதிவாசிக்கு ராக்கெட் விண்கலம் எப்படியோ அப்படி அவர்களுடைய தொழில்நுட்பமும் நமக்கு இருக்கும். அவர்கள் வாழும் கிரகங்களுக்கு ஆபத்து வரும் போது, அல்லது அவர்கள் கிரகங்களில் வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் போது, அவர்கள் மற்ற கிரகங்களில் உள்ள தண்ணீர் உள்ளிட்ட இயற்கைப் பொருட்களை பிரம்மாண்டமான விண்வெளிக் கப்பல்களுடன் வந்து அவர்கள் சூறையாடலாம். எனவே நாம் காலத்தை வெல்லும் வயதை அடைவதையும், வேற்று கிரகங்களில் சென்று குடியேறும் அளவுக்கான திறமையும் ஒரு காலத்தில் நாமும் பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

No comments:

Post a Comment