Thursday, 2 December 2010

குறை பிரசவம் ஏற்படக் காரணம்................

அடிக்கடி கருப்பைத் திசுச்சுரண்டல் எனப்படும் டி அண்ட் சி செய்து கொள்வதால் கருப்பைக் கழுத்துப் பகுதி வலுவிழந்துவிடும். இதனால் கருப்பைத் திசு தளர்ந்து அதில் கருத்தரித்து வளரும்போது கருவை தங்கவைக்க முடியாமல் வாய் திறக்க ஆரம்பித்துவிடும். பெரும்பாலும் இந்த நிலையில் கரு சிதைந்துவிடும். அவ்வாறு நிகழாதபோது குறை பிரசவம் உறுதியாகும்.

குழந்தை கருவில் வளர்ந்து கொண்டிருக்கும்போது கருப்பையானது குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அதாவது குழந்தையின் வளர்ச்சி முற்றுப் பெறும் முன்பே வெளியேற்றிவிடுவது ஒரு காரணம். இத்தகைய தன்மையில் பிறக்கும் குழந்தைதான் குறைமாதக் குழந்தை அல்லது பிரிடெர்ம் பேபி.

கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு அதனால் குழந்தை எடை குறைவாகப் பிறந்துவிடுதல் இன்னொரு காரணம். இந்தக் குழந்தையை வளர்ச்சிக் குறைந்த அல்லது முதிராத குழந்தை என்பார்கள். ஆங்கிலத்தில் இதற்கு பிரிமெச்சூர் பேபி என்று பெயர்.

பொதுவாக குழந்தையானது 37வது வாரத்திற்கு முன்பு பிறந்தால் குறைபிரசவக் குழந்தையாகவும், 37 வாரத்திற்குப் பிறகு பிறந்தும் எடை குறைவாக இருந்தால் முதிராத குழந்தையாகவும் கருதப்படுகிறது.

தாயின் உடல்நலம் இன்னொரு முக்கியக் காரணம். தாய் போதுமான ஊட்டச்சத்து சாப்பிடாதவராக இருந்து, கர்ப்ப கால பராமரிப்பு போதுமானதாக இல்லாவிட்டாலும், இரத்த சோகை மற்றும் அதனால் தோன்றும் அசதியினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பால்வினை நோய்களால் தாக்கப்பட்டிருந்தாலும் குறைபிரசவம் நிகழும்.

ஏறக்குறைய 15 விழுக்காடு பெண்கள் இரத்த சோகை மற்றும் அசதியால் பாதிக்கப்படுகிறார்கள்.

கர்ப்பிணிக்கு கடுமையான காய்ச்சல், முறைக் காய்ச்சல், இரத்த சோகை, பிபி (இரத்தக் கொதிப்பு), சர்க்கரை வியாதி, மஞ்சள் காமாலை, சிறுநீரக பாதிப்புகள், இதய நோய்கள் மற்றும் தொடர்ந்த சீதபேதி இருந்தாலும் குறை பிரசவமாகும். இவ்வாறு ஏற்படும் பிரசவங்களில் 65 விபக்காடு தாயின் உடல் நலக் குறைவால் தோன்றுகின்ற பிரச்சனையாகும்.

தாயின் வயது இன்னொரு முக்கிய காரணம். 16 வயதுக்கு உட்பட்டவராகவோ அல்லது 35 வயதுக்கு மேற்பட்டவராகவோ இருக்கும் தலைச்சன் கர்ப்பிணிகளுக்கு குறைபிரசவம் நிகழ அதிக வாய்ப்பிருக்கிறது.

அடிக்கடி கருத்தரிப்பவர்களுக்கும் குறைப் பிரசவம் நிகழும். செப்டேட் யுடரஸ் எனப்படும் தடுக்கமைந்த கருப்பை, டைடெல்பிஸ் எனப்படும் இரட்டைக் கருப்பை, ஒற்கைக் கூம்பு கருப்பையான யுனிகார்னுயேட் யுடரஸ், கவர்க்கூம்பு கரும்பை எனப்படும் பைகார்னுயேட் யுடரஸ் ஆகியவற்றாலும் குறைப்பிரசவம் நிகழும்.

பிறவியல் வரும் பிரச்சனைகளால் வளர்ச்சியடையாத கருப்பை, கருப்பையில் பைப்ராய்டுகள் எனப்படும் நார்க்கட்டிகள், கருப்பை வளர்ச்சியடையாத நிலையில் கருத்தரித்தல், கருப்பை இடம் மாறுதல், குறையுள்ள விந்தணு மற்றும் முட்டையினால் கருத்தரித்தல் ஆகியவையும் குறை பிரசவத்தை உண்டாக்கும்.

குழந்தை இடம் மாறி அமைந்திருப்பதால் சுமார் கருவுற்ற 5 விழுக்காடு பெண்களுக்குக் குறை பிரசவம் ஏற்படுகிறது.

No comments:

Post a Comment