Thursday, 9 December 2010
விக்கிலீக்ஸ் வெளியிட்ட சிறிலங்கா அரசின் போர் குற்றங்கள்
இன்றர்நெற் தகவல் இணையம் பிரபல்யம் அடைவதற்கு விக்கிலீக்ஸ் என்ற பெயரில் இயங்கும் இணையதளம் அண்மைக்காலமாக முக்கிய பங்களிப்புச் செய்கின்றது விக்கிலீக்ஸ் இணையதளத்தின் பணி எல்லோராலும் வரவேற்கப்படுகிறது என்று சொல்ல முடியாது.
விக்கிலீக்ஸ் இணையதளத்தை உருவாக்கிய 39 வயதினரான யூலியன் அசன்கே இன்று வேட்டையாடப் படும் மனிதராக மாறிவிட்டார் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க உலகின் பெரும்பாலான அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
சுவீடன் நாட்டு அரசு ஒரு படி மேலே போய் அவர் மீது பாலியல் குற்றச் சாட்டுக்களைச் சுமத்தியதோடு அவரைப் பிடித்துத் தரும்படி மேற்கு ஜரோப்பிய நாடுகளைக் கேட்டுள்ளது. சென்ற ஆகஸ்து மாதம் அவர் சுவீடன் நாட்டுப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சுவீடன் அரசு யூலியன் அசன்கேக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
யூலியன் அசன்கேயின் பிரபல்யத்திற்கு என்ன காரணம் என்று பத்திரிகையாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் ஆய்வு செய்கின்றனர் “ எம்மைப் பலம் அடையச் செய்யுங்கள்” (Keep us Strong) என்ற பெரிய எழுத்து மகுட வாசகத்துடன் திகழும் அவருடைய தளம் அரசுகளின் இரகசியங்களை அம்பலப் படுத்துவதில் முனைப்பாக ஈடுபடுகிறது.
விக்கிலீக்ஸ் இதுவரை அமெரிக்கா நடத்தும் ஈராக் போர் அப்காணிஸ்தான் போர் பற்றிய பல்லாயிரம் ஆவணங்களையும் கோப்புக்களையும் அம்பலப் படுத்தியுள்ளது. அமெரிக்க பாதுகாப்புச் செயலகத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சிறிய துவாரம் பெரிய கப்பலைப் மூழ்கடித்துவிடும் என்று இராசதந்திர உலகில் சொல்வார்கள் இரகசியங்களைக் வெளியே செல்ல விடும் துவாரம் எங்கே இருக்கிறது என்று பென்ரகன் எனப்படும் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலகம் தேடத் தொடங்கியுள்ளது.
இருட்டில் கறுத்தப் பூனையைத் தேடுவதற்கு இது சமமானது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள் தகவல் தொழில்நுட்பம் இரு பக்கமும் கூரான கத்தி போன்றது. ஆது எதிரியையும் வெட்டும் பாவிப்பவரையும் வெட்டும். நல்லதும் கெட்டதும் அதில் அடங்கும்.
அமெரிக்காவின் போர் நடவடிக்கைகள் பற்றிய இரகசியங்களை வெளியிட்டுப் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இப்போது புதியதொரு துறையில் தாக்குதல் தொடுத்துள்ளது.
தாய் நாட்டிலிருந்த வெளி நாடுகளுக்கு இராசதந்திரத் தூதர்களாகச் செல்லும் அதிகாரிகளின் முழுமுதற் பணி தகவல் சேகரிப்பாகும் இதற்காக இராசதந்திரத் தூதர்களுக்கு தகவல் சேகரிப்புப் பயிற்சி வளங்கப் படுகிறது. தகவல் என்ற சொல்லில் உளவுத் தகவல் என்ற செயற்பாடும் அடங்கும்.
உலக நாடுகள் அனைத்தும் தமது தூதர்கள் மூலம் பிற நாடுகளை வேவு பார்க்கின்றன என்று சொல்வதில் தவறில்லை இது ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை என்றும் சொல்லலாம் தகவல் சேகரிப்பதற்காகத் தூதர்கள் செய்யும் கூத்துக்களை இவ்விடத்தில் வெளியிட முடியும்.
தூதரகங்களில் நடக்கும் விருந்துகளும் மாலைப் பொழுது மது வழங்கல் நிகழ்ச்சிகளும் தகவல் சேகரிப்பு நோக்கில் நடத்தப் படுகின்றன தமிழ் எம். பீக்களும் வேறு பிரபலங்களும் குறிப்பாகச் சமூக ஆர்வலர்கள் என்று தம்மைப் பற்றிக் கூறிக் கொள்வோர்களும் தூதரகம் விடுக்கும் அழைப்பிற்காகத் தவம் கிடக்கிறார்கள்.
இலவச உணவு என்று ஒன்றுமே கிடையாது. இது பொருளாதார நிபுணர்கள் கூறும் முக்கிய வாசகம் உங்களை வருத்தி அழைப்பதோடு உயர்தர மதுவும் பல்சுவை உணவும் தருகிறார்கள் என்றால் அதற்கு அர்த்தம் இல்லாமல் விடுமா?
எமது விடுதலைப் போர் காலத்தில் கொழும்பில் நிலை கொண்டிருந்து தகவல் சேகரிப்பில் ஈடுபட்ட அனைத்துத் தூதரகங்களும் தமிழர்களையும் சிங்களவர்களையும் மாறி மாறி அழைத்ததோடு தின்னவும் குடிக்கவும் கொடுத்து இரகசியங்களை கநற்து கொன்டன. இது நன்கு தெரிந்த விடயம்.
அது மாத்திரமா? சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரக அதிகாரியான தமிழ் சிங்கள மொழி தெரிந்த ஹம்சா என்ற அதிகாரி சென்னை வாழ் பத்திரிகையாளர்களை தூதரக விருந்துக்கு அழைத்துப் புலிகளுக்கு எதிரான நச்சுப் பிரசாரங்களை முன்னெடுத்தார்.
அவருடைய பணியை மெச்சிய சிறிலங்கா அரசு அவருக்குப் பதவி உயர்வு கொடுத்து இலன்டன் தூதரகத்தில் பணிக்கமர்த்தியுள்ளது ஏறாவூரைச் சேர்ந்த இந்த முஸ்லிம் சகோதரர் இலன்டனில் தனது எட்டப்பன் வேலையைத் தொடர்ந்து செய்வதாக அறிகிறோம்.
இவ்வளவு விரிவாக தகவல் சேகரிப்புப் பற்றிக் கூற வேண்டிய அவசியம் இருக்கிறது. விக்கிலீக்ஸ் இப்போது ஆட்டைக் கடித்து மாட்டைக்கடித்து இறுதியில் மனிதரைக் கடிக்கும் விலங்கினம் போல் இராசதந்திர உலகின் மேலும் கை வைக்கத் தொடங்கியுள்ளது.
நவம்பர் 28.2010ம் நாள் உலகளாவிய அமெரிக்கத் தூதரகங்கள் வாஷிங்ரன் இராஜங்கச் செயலகத்திற்கு அனுப்பிய 250,000 இரகசிய இராசதந்திர ஆவணங்களைக் அது அம்பலப் படுத்தியுள்ளது உலகின் முக்கிய செய்தி என்று இதை செய்தி நிறுவனங்கள் கருத்து வெளியிட்டுள்ளது.
இராசதந்திரத்தின் அடிப்படை இரகசியம் காத்தல் தான் சேகரிப்பு எவ்வளவு முக்கியமோ அதிலும் கூடிய முக்கியத்துவம் இரகசியத்தைப் பாதுகாப்பாக வைத்திருத்தலாகும் விக்கிலீக்ஸ் செய்த வேலை இராசதந்திர உலகை ஆட்டங் காணச் செய்துள்ளது.
பல நாடுகளுக் கிடையிலான இராசதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது நட்புறவைப் பேணிய படி அதற்கு எதிரான இரகசியக் கண்டன்தை தாய் நாட்டிற்கு அனுப்புவது வழமையான படியால் பரஸ்பர வெறுப்பும் கோபதாபவும் ஏற்படுவதைத் தடுக்க முடியாது.
பிரான்சுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. பாக்கிஸ்தான் தலைவர்கள் பற்றிய தூற்றல்கள் அந்த நாட்டில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது போர்க் காலத்தில் அமெரிக்கத் தூதரகம் கொழும்பில் இருந்து அனுப்பிய தகவல்கள் சிறிலங்கா அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களுக்குப் பேரிடியாக விழ்ந்துள்ளது.
அமெரிக்கத் தூதர் பற்றீசியா பூட்டெனிஸ் வாஷிங்ரனுக்கு அனுப்பிய ஆவணங்கள் சிறிலங்காவைப் போர் குற்ற விசாரணை செய்வதற்கும் தண்டனை வழங்குவதற்கும் போது மானவையாக இருக்கின்றன. எந்தக் குற்றச் சாட்டையும் சகட்டுமேனிக்கு மறுக்கும் சிறிலங்கா அரசு மவுனம் காத்து வருகிறது.
பொதுமக்களைக் குறிவைத்து இராணுவம் நடத்திய கொலை வெறித் தாக்குதல்கள் பற்றிப் பற்றீசியா பூட்டெனிஸ் தனது ஆவணங்களில் ஆதார பூர்வமாகக் குறிப்பிட்டிருக்கிறார். பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி அதற்குள் வந்து பாதுகாப்பாகத் தங்கும்படி அழைப்புத் அiழைப்பு விடுத்த அரசு அதே மக்களைக் கொன்று குவித்தது மிகப் பெரிய போர் குற்றம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அரசு தனது இராணுவத்தைத் தண்டிக்கப் போவதில்லை என்றும் அவர் பதிவு செய்கிறார்.
விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளி வந்த இரகசிய ஆவணங்களில் சிறிலங்கா பற்றிய இன்னும் பல தகவல்கள் இருக்கின்றன அவற்றைப் பொறுமையாகப் பகுப்பாய்வு செய்து வரிசைப் படுத்தும் பணி மிகவும் கடினம் என்றாலும் நாம் அந்தப் பணியைச் செய்தே ஆகவேண்டும் போர் குற்ற விசாரணைகளும் தண்டனைக்குமான எமது பங்களிப்பாக அது அமையும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment