Wednesday, 24 March 2010

உலக சாலை இணைக்கும் திட்டம்






ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சியின் பேரில், ஆசியாவில் உள்ள நாடுகளை ஐரோப்பிய நாடுகளுடன் இணைக்கும் வகையில் சர்வதேச இணைப்பு சாலையை அமைக்க, கடந்த 1959ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. ஒரு லட்சத்து 41 ஆயிரம் கி.மீ., நீளமுள்ள இந்த சாலை, 32 ஆசிய நாடுகளின் வழியாக ஐரோப்பிய நாடுகளை இணைக்கும். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் வங்கதேசமும் இத்திட்டத்தில் பங்கு கொண்டுள்ளன. 2010ம் ஆண்டிற்குள் திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டது.



இதன் முதற்கட்ட பணிகள் 1960ம் ஆண்டு துவங்கியது. பின், நிதி பற்றாக்குறை காரணமாக திட்டம் முடங்கியது. கடந்த 1980 முதல் 1990ம் ஆண்டு வரையிலான காலத்தில் ஆசிய நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களினால் இந்த திட்டம் புத்துயிர் பெற்றது. ஆசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஒரு கூட்டம், கடந்த 2003ம் ஆண்டில் பாங்காக்கில் நடந்தது. அடுத்து, 2004ம் ஆண்டு, ஷாங்காயில் நடந்த கூட்டத்தில், 32 நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதை தொடர்ந்து, 2005ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி முதல் மீண்டும் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதுவரை ஒரு லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. திட்டத்தை தொடர மேலும் 81 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது.



மேம்பட்ட தேசிய நெடுஞ் சாலை அமைவதால், நாட்டின் வாணிபம் பெருகும்; ஆசியநாடுகளுக்கிடையே தனிப்பட்ட உறவு, திட்ட முதலீடு, போக்குவரத்திற்கு தேவையான கண்டெய்னர் டெர்மினல்கள் மற்றும் சமூக மேம்பாடு அடையும்; புதிய சாலை வழியாக சுற்றுலா வளர்ச்சி அடையும்; அண்டை நாடுகளுடன் எளிதாக வர்த்தகம் செய்ய முடியும் என்பது போன்ற காரணங்களாலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க இத்திட்டம் பெரிதும் உதவும் என்பதாலும், இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த இந்தியா பெரிதும் விரும்புகிறது. ஆனால், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாததால் இத்திட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இதுகுறித்து, இந்தியாவிற்கான திட்ட ஆலோசகர் ஓம்பிரகாஷ் கூறுகையில், 'அரசியல் காரணங்களால் சில நாடுகளில் இந்த திட்டம் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகளால் இத்திட்டம் மிகவும் தாமதமாகி வருகிறது' என்றார். வங்கதேசத்தில் அமைய உள்ள ஆசிய நெடுஞ்சாலை திட்டப்பணிகளை அங்குள்ள இந்திய எதிர்ப்பு சக்திகள் முழு அளவில் எதிர்த்து வருகின்றன. திட்டம் அமையக் கூடாது என்பதற்கு அவர்கள் கூறும் காரணங்கள்: இந்தியாவில் நாசவேலைகள் செய்யும் பயங்கரவாதிகள் மற்றும் போதை கும்பல்களின் புகலிடமாக வங்கதேசம் உள்ளது என்று இந்தியா கருதுகிறது. எனவே, இச்சாலை வங்கதேசத்தில் அமைக்கப்பட்டால், இந்தியாவின் தலையீடு வங்கதேசத்தில் அதிகரித்து, பின், 'அவர்களை தேடுகிறோம்' என்று கூறி வங்கதேசத்தவர்களை கொன்றுவிடும். இதனால், வங்கதேசத்தின் வளர்ச்சிகள் பாதிக்கப்படும்.



இந்தியாவிடம் பலம் பொருந்திய விமானம் மற்றும் கப்பற்படை உள்ளது. இதனால் இந்தியப் பெருங்கடலில் ஆப்ரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை உள்ள பகுதியில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்து விடும். இந்தியாவை எதிர்க்கும் பயங்கரவாதிகளை வளர்க்கும் இடமாக பாகிஸ்தான் உள்ளது. ஆசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டால் எளிதாக அவர்களை இந்திய ராணுவம் நசுக்கிவிடும். இந்தியாவில் உள்ள அருணாசலப்பிரதேசம், மேகாலயா, அசாம், திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம் ஆகியவை உற்பத்தி பொருட்களுக்கு தற்போது வங்கதேசத்தை சார்ந்து உள்ளன. ஆசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டால், இந்திய பொருட்களே இந்த மாநிலங்களுக்கு எளிதாக விற்பனைக்கு சென்றுவிடும். இதனால், வங்கதேசம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும். நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளுடன் சாலை வழியாக வாணிபம் செய்வதற்கு கூட வங்கதேசத்தவர்களுக்கு பயங்கரவாதிகளின் நடமாட்டம் என்று காரணம் கூறி இந்தியா தடைவிதித்துள்ளது. ஆனால், அதே காரணத்தை கூறி வங்கதேசத்தில் நுழைய இந்தியா விரும்புகிறது.



ஆசிய நெடுஞ் சாலை வங்கதேசத்தில் அமைக்கப் பட்டால், இந்திய வணிகர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்கு தான் பெரிதும் உதவும். இந்தியாவிற்கு பயன்படும் ஆசிய நெடுஞ்சாலையை அமைக்க வங்கதேசம் ஏன் உதவவேண்டும். இவ்வாறு இந்திய எதிர்ப்பாளர்கள் கூறி வருவதால், ஆசிய நெடுஞ்சாலை அமைவதில் சிக்கல் தொடர்கிறது. இந்நிலையில், அரசியல் ரீதியாக இப் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருகின்றன. இந்த இடியாப்பச் சிக்கல் தீர்க்கப்பட்டால் மட்டுமே ஆசிய நெடுஞ்சாலை திட்டம் முழுமையடையும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment