இந்தியாவிற்குள் நுழைய பிரபாகரனின் தாய்க்கு அனுமதி மறுப்பு
ஏப்ரல் 18,2010,00:00 IST
சென்னை : சிகிச்சைக்காக சென்னை விமான நிலையம் வந்த விடுதலைப் புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயாரை, இந்தியாவிற்குள் நுழைய அனுமதியில்லை எனக்கூறி குடியுரிமை அதிகாரிகள் சென்னையில் இறங்க அனுமதி மறுத்தனர். வேறு வழியின்றி வந்த விமானத்திலேயே அவர் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். விமான நிலையத்தில், வைகோ போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விடுதலைப் புலி இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாய் பார்வதி(80). இவர், பக்கவாத நோய் சிகிச் சைக்காக, சென்னையில் சிகிச்சை பெற முடிவு செய்தார். இதற்காக நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு பார்வதி, அவருக்கு உதவியாக விஜயலட்சுமி என்பவரும், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தனர். விமான நிலையத்தில் இருவரிடமும் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது பார்வதி, இந்தியாவில் நுழைய அனுமதி இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் உள்ளே நுழையக் கூடாது என குடியுரிமை அதிகாரிகள் கூறினர். அவர்களை மீண்டும் கோலாலம்பூர் செல்லும்படி அறிவுறுத்தினர்.'நான் சென்னையில் சிகிச்சை பெற வந்துள்ளேன்; திரும்பிச் செல்ல முடியாது' என, பார்வதி மறுத்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற் பட்டது.
பார்வதியை வரவேற்று, அழைத் துச் செல்வதற்காக ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மற்றும் சிலர் விமான நிலையத்திற்கு வந்தனர். பின், பார்வையாளர்கள் நுழைவுச்சீட்டை பெற்றுக் கொண்டு, பன்னாட்டு முனைய வருகை பகுதிக்குள் சென்றனர். பார்வையாளர்கள் நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விமான நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே செல்ல முடியும். போர்டிங், இமிகிரேஷன் பிரிவுகளுக்கு செல்ல அனுமதியில்லை. 'பார்வதி, இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட் டுள்ளது; அவர் மீண்டும் கோலாலம்பூருக்கு அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்படுகிறார்' என்ற தகவல் வைகோவிற்கு தெரிவிக்கப் பட்டது. 'பார்வதியை பார்க்க வேண்டும், அவரை சென்னையில் இறங்க அனுமதிக்க வேண்டும்' என்று, விமான நிலைய அதிகாரிகளிடம் வைகோ வாதிட்டார்.
' அனுமதி தரும் வரை நான் விமான நிலையத்தில் இருந்து வெளியேற மாட்டேன்' என்று கூறி, வைகோ தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் நள்ளிரவில் பதட்டம் ஏற்பட்டது. அதிரடிப்படை உள்ளிட்ட அனைத்து பிரிவு போலீசாரும் விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர். வைகோவிடம் பேச்சு நடத்திய போலீசார், 'பார்வதி மீண்டும் கோலாலம்பூர் சென்று விட்டார்; நீங்களும் புறப்படுங்கள்' என்றனர். அதற்கு, 'அவர் இன்னும் புறப்படவில்லை; அவரை சென்னையில் இறங்க அனுமதியுங்கள்' என்று வாதாடினார். பார்வதியை ஏற்றிக் கொண்டு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் இருந்து நள்ளிரவு 12.05க்கு புறப்பட்டுச் சென்றது.
அதன்பின், போராட்டத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது: பக்கவாதத்திற்கு சிகிச்சை பெற சென்னை வந்த பார்வதியை, இந்திய குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியது மனிதாபிமானமற்ற, கொடுமையான செயல். அவர் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு இந்திய, தமிழக அரசுகள் தான் பொறுப்பு. தற்போது மத்திய தொழிலக பாதுகாப்புப் படை போலீசாரின் கட்டுப்பாட்டில் தான் விமான நிலையம் உள்ளது. ஆனால், தமிழக போலீசார் விமான நிலையத்திற்குள் நுழைந்து அத்துமீறி செயல்பட்டுள்ளனர். பார்வதி உரிய ஆவணங்களுடன், அனுமதி பெற்று தான் இந்தியா வந்துள்ளார். இருப்பினும், அவர் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே வரும்போது, அவருக்கு பலத்த பாதுகாப்புடன், பூர்ண கும்ப மரியாதை தரப்படுகிறது. ஆனால், ஒரு வயதான தாய், சிகிச்சைக்காக சென்னைக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வாறு வைகோ கூறினார்.
உண்ணாவிரதம் அறிவிப்பு: 'சிகிச் சைக்காக சென்னை வந்த பார்வதியை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து, சென்னையில் வரும் 22ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என, ம.தி.மு.க., அறிவித்துள்ளது
No comments:
Post a Comment