Thursday 9 December 2010

இராஜபக்சவுக்கு இலண்டன் மாநகரில் வரலாறு கொடுத்துள்ள முதல் அடி

அநீதி கண்டு கொதித்தெழுந்த பாரதி ‘நெஞ்சு பொறுக்குதில்லை…’ என்று கொதித்தெழுந்தான். தமிழ் மக்களின் இரத்தச் சுவடுகள் நிறைந்த தனது கால்களை ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகத்தில் ராஜபக்ச பதித்து ‘பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என போதனை செய்ய முற்பட்டபோது இலண்டன் மாநகரில் நெஞ்சு பொறுக்கா தமிழ் மக்கள் கொதிந்தெழுந்து அவரை அங்கு விரட்டினர்.


வரலாற்றில் மகிமைக்குரிய பணியை புலம் பெயர்ந்த தமிழர்கள் அங்கு ஆற்றினர். ஈழத் தமிழரின் எலும்புக் கூடுகளின் குவியலில் ஏறி சக்கராதிபத்தியத்தின் உச்சியைத் தொட்டு பாக்கியவனாய் கொழும்பில் காட்சியளிக்கும் ராஜபக்ச கொலைகாரன் என்ற பட்டத்தால் இலண்டனில் முள்முடி சூடப்பட்டார்.

‘இதயதாகம் உள்ளவர்களே என்னிடம் வாருங்கள்’ என்று கூறிய கிருஸ்துவுக்கு கொலைகாரர்கள் முள்முடி தரித்தார்கள். ஆனால் வரலாறு என்றும் மங்கா ஒளிவட்டத்தை அவருக்குச் சூடியது. தமிழரின் இரத்த தாகம் கொண்ட மகிந்தவுக்கு சிங்கள தேசம் பொன்முடி சூடினாலும் அவரது இரண்டாவது பதவியேற்பு முடிந்து ஒருமாதமாகும் முன்னம் உலகின் மாபெரும் நகரமான லண்டனில் அமைந்துள்ள உலகின் தலையாய பல்கலைகழகமான ஒக்ஸ்பேட்டில் வைத்து புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ராஜபக்சவுக்குரிய வரலாற்றுப் பரிசான முள்முடியைச் சூடியுள்ளனர்.

இதய தாகம் உள்ளவருக்கு வரலாறு 2000-ம் ஆண்டுகளுக்கும் மேலாய் அளித்துப் பேணும் பரிசு ஒளிவட்டம். ஆனால் இரத்த தாகம் உள்ளவருக்கு கொழும்பில் பொற்கிரீடம் சூட்டப்பட்டாலும் வரலாற்று தலைநகரான லண்டனில் அவருக்கு வரலாறு முள்முடி சூடி கொலைகாரன் என்ற பட்டத்தையும் அளித்துள்ளது.

இலண்டன் வாழ்தமிழ் மக்களின் மகிமைக்குரிய பணிக்காக வரலாறு அவர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பால்மணம் மாறாப் பச்சிளம் பாலரில் இருந்து மூதாட்டிவரை ராஜபக்சாக்களால் கொன்று குவிக்கப்பட்டதைக் கண்டு நெஞ்சு பொறுத்த தமிழர் இருக்க முடியாது. கொத்துக் குண்டுகளாலும், கொலைக் கலன்களாலுந்தான் தமிழரின் இரத்தத்தை ஆறாக ஓடவைக்க ராஜபக்சாக்களால் முடிந்தது. ஆனால் அந்த ராஜபக்சவை நீதிகொண்ட குரலின் வலிமையால் இலண்டன் மாநகரில் ஒழித்து ஓடவைக்க புலம் பெயர் இலண்டன் வாழ் தமிழரால் முடிந்துள்ளதென்பது சத்தியத்தின் வலிமையை உலகுக்கு நிறுவுவதற்கான ஒரு கட்டியமாக உள்ளது.

நீதியின் குரலால் இலண்டனில் துரத்தப்பட்டவர் அநீதியின் கரங்களால் கொழும்பில் வரவேற்கப்பட்டார் என்ற வரலாற்றுப் பதிவு சிங்கள நாகரிகத்தை வரலாற்றில் கேள்விக்குறியாக்கி உள்ளது.

1971-ம் ஆண்டு ஒரு மன்னம்பரியை சிங்கள இராணுவம் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொடுமைப்படுத்தியதை மேடைக்கு மேடை நாடகமாய் அரங்கேற்றி ஸ்ரீமாவோ பண்டாரநாயாக்காவை வீழ்த்துவதற்கான அரசியலை ஜே.வி.பி. அரங்கேற்றியது. ஆனால் அந்த ஜே.வி.பி. இசைப்பிரியாக்களை சிங்கள இராணுவம் பாலியல் வல்லுறவுக்கும், வன்கொடுமைக்கும், படுகொலைக்கும் உள்ளாக்க விளக்குப் பிடித்துக் கொண்டிருந்தது. அதனைப் பறைசாற்றும் வகையில் ஜே.வி.பியின் பிரச்சாரப் போதகராய் இருந்தவரும் இப்போது பாதி ஜே.வி.பி.யின் தலைவராய் இருப்பவருமான விமல் வீரவன்ச விளக்குப் பிடித்த கரங்களால் ராஜபக்சவுக்கு மாலை சூடி கொழும்பில் வரவேற்பளித்து புகாழாரம் சூடியுள்ளார்.

நாடக வடிவில்தான் ஒரு மன்னம்பரி பற்றிய காட்சிகளை மேடைகளில் காட்ட முடிந்தது. ஆனால் இசைப்பிரியாக்கள் புத்தரின் புதல்வர்களது கரங்களில் பட்ட சிலுவைப்பாடுகளை ஒளிநாடாக்களில் இரத்தமும் தசையுமாய் உலகம் காண்கிறது. ஞானத் தந்தையும் ஞானத்தாயும் கிறிஸ்துவை எனக்குக் காட்டிய கண்களால் இசைப்பிரியாக்களை நான் காணும் போது எனக்குள் இருக்கும் தாய்மையின் கண்கள் இசைப்பிரியாக்களுக்கு கண்ணீர் மாலை சூடுகிறது. இசைப்பிரியாக்களின் காணொளிக் காட்சிகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காத் தமிழ்க் கண்கள் குமுறி எழுந்து இலண்டனில் இராஜபக்சாவின் போலி முகங்கள் மீது அக்கினிச் சுவாலையை வீசின.

இசைப்பிரியாக்களே உங்களின் துயரங்களை எங்கள் இதயங்களில் சுமக்கிறோம். காந்தி தனக்கு ஏற்பட்ட ‘சத்திய சோதனையை’ உலகுக்கு பரிசளித்துள்ளார். இசைப்பிரியாக்களே உங்களுக்கு ஏற்பட்ட சிலுவைப்பாடுகளை எங்கள் இதயங்கள் தாங்க முடியாமல் சுமக்கின்றது. உங்கள் பரிசை வரலாற்றின் பக்கங்களில் நாங்கள் ஆழப்பதிக்கின்றோம். உங்களின் அழுகுரல்களால் நிரம்பிய எங்கள் இதயங்கள் இலண்டன் மாநகரில் ராஜபக்சாக்களின் முகங்களில் கதிரலைகளை வீசியுள்ளன. ராஜபக்சாக்களே இது ஒரு தொடக்கம் மட்டுமே. உங்களை இந்தப் பிரபஞ்சத்தின் மூலை முடுக்குக்களில் எல்லாம் இசைப்பிரியாக்களின் குரல்கள் ஓட ஓடத் துரத்தி அடிக்கும்.

புத்தரின் புதல்வர்களது கல்நெஞ்சங்களைப் பச்சையாய்ச் சித்தரிக்கும் காணொளிக் காட்சிகள் எம்மை உறங்காத கண்ணுள்ளவர்களாயும், ஓயாத மனமுள்ளவர்களாயும் ஆக்கிவிட்டது. ‘நீதியின் பொருட்டு துயர் உறுவோர் பேறுபெற்றோர்’ என்ற கிருஸ்துவின் வார்த்தை சத்தியமாய் நிலைக்கும். கண்ணுள்ளவர்களே முதலில் அழக்கடவீர். அடுத்து உங்களின் துயரம் சத்தியமாய் எழட்டும்.

கிறிஸ்து தேவகுமாரனாக இருந்த போதிலும் கொலைஞர்களின் கரங்களே பட்ட சிலுவைப்பாட்டை தாங்க முடியாமல் ‘என் பிதாவே என் பிதாவே என்னை ஏன் கைவிட்டீர்! ‘ என்று தன் வேதனையை கொப்பளித்தார். புத்தரின் புதல்வர்களது கரங்களில் இசைப்பிரியாக்கள் வதைபட்ட போது அவர்கள் கதறிய வார்த்தைகள் எவைகள் என்பதை எங்கள் செவிகள் அறியா. ஆனால் அவர்கள் பட்ட துயரங்களை உணரும் ஆற்றல் எங்கள் இதயங்களுக்கு உண்டு .

இலண்டன் சம்பவம் ஒரு சிறிய விடயமல்ல. வரலாற்று அன்னையின் கருப்பை நெருப்பை சுமக்கின்றது என்ற செய்தியை பறைசாற்றிய சம்பவம் அது

தூக்கு கயிற்றில் தொங்க விடுவது மட்டும்தான் தண்டனை என்று ஆகிவிட மாட்டாது. வரலாற்று அன்னையின் ஆணை பெற்ற நீதி தேவதையின் காலடிக்குள் ராஜபக்சாக்கள் மிதிபடத் தொடங்கிவிட்டதை காட்டும் சம்பவம் அது. ராஜபக்சவுக்கு வரலாற்று அன்னை தண்டனையாக கொடுத்துள்ள முதலாவது அடியது .

தமிழன் இனி நெஞ்சு பொறுக்கான். உலக மாந்தர்கள் நீதி கேட்கும் நாள் வரும். ராஜபக்சக்களின் சிம்மாசனத்தை வரலாற்று அன்னை சுடுகாட்டுக்கு அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை இலண்டன் சம்பவம் உணர்த்த தலைப்பட்டு விட்டது.

நெருப்பை கருக்கொண்டு விட்ட வரலாற்று அன்னையே நாம் அனைவரும் உனக்கு மருத்துவிச்சிகள் என எழுவோம். உனது பாதங்களில் நான் என்னை மருதுவிச்சியாய் என்னை சத்திய பிரமாணம் செய்து கொள்கின்றேன். வரலாற்று அன்னையே வளர்க தாய்மை. உன் தலையை என் இரு கரம் கொண்டு வருடுகிறேன், உன் கூந்தலை என் பத்துவிரல்களாலும் கோதி விடுகிறேன் .

நெஞ்சு பொறுக்குதில்லை வரலாறு விதிக்கும் நியாயத் தீர்ப்பு காலத்துக்காய் காத்திருக்கிறோம்.

இமெல்டா போல் – பொங்குதமிழ்

No comments:

Post a Comment